சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று பரவியது. தொடக்கத்தில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக நிலவியது. இருப்பினும் பின்னர் சீனா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் கட்டுக்குள்வந்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சீனா வருபவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை புதிதாக 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; ஆறு பேருக்கு சமூகத் தொற்றாக வைரஸ் பரவியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ரஷ்யா எல்லையிலுள்ள ஹைலோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.