நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் மையப் பகுதியில் உள்ள அல்-நூர் எனும் மசூதி உள்ளிட்ட இருவேறு மசூதிகளில் புகுந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது தனியங்கி துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டானர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உள்பட 49பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டால் கிறிஸ்ட்சர்ச் போர்களம் போல் காட்சியளித்தது. அந்த பகுதி முழுவதும் ரத்த கறையால் சூழ்ந்திருந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆஸ்திரியாவை சேர்ந்த 28வயது இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி அவர் குடியேற்றத்துக்கு எதிரான தீவிர வலதுசாரி கொள்கையை அடிப்படையாக கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அந்த இளைஞரை ஏப்ரல் 5ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் எனவும், அதுவரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.