வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 'வெஜிடேடிவ் ஸ்டேட்' எனப்படும் கோமாவுக்கு ஒத்தநிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அந்த நபருக்கு எந்தவொரு உணர்வும், இருப்பு நிலையும் அறியமுடியாத அளவிற்கு ஏற்படும் பெருந்தாக்கமே வெஜிடேடிவ் ஸ்டேட்டாகும்.
இந்த நிலையில்தான் தற்போது கிம் இருப்பதாகவும் அவருக்கு மருத்துவ உதவிபுரிய சீனா குழு விரைந்துள்ளதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் நேற்று வடகொரியாவில் கிம் பிரத்யேகமாகப் பயணம்செய்யும் ரயிலின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட அமெரிக்க ஊடகங்கள், அதில்தான் கிம் சிகிச்சைப் பெற்றுவருகிறார் என்று தெரிவித்துள்ளன.
கிம்முக்கு இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்று அவர், உயிருக்குப் போராடிவருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்தார். ஆனால் கிம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் வடகொரிய ஊடகம் தொடர் மௌனம் காத்துவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வடகொரிய ஊடகங்கள் மௌனம் சாதித்துவருவது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 11ஆம் தேதிக்குப்பின் வடகொரிய ஊடகம் எதிலும் கிம் தென்படவில்லை. ஊடகங்களும் அவரது உடல்நிலை தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் தொடர்ச்சியாகப் புறக்கணித்துவருகின்றன.
2014ஆம் ஆண்டு கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒருமாத காலம் தலைமறைவாக இருந்து, குணமடைந்த பின்னரே வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரேசில் அதிபர் மீதான ஊழல் புகரை விசாரிக்கக் கோரிக்கை!