காபூல் (ஆப்கானிஸ்தான்): குண்டுவெடிப்பு தாக்குதலில் 60 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்திலும், அருகில் உள்ள இடங்களிலும் நிகழ்த்தப்பட்ட 4 குண்டுவெடிப்புத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நெரிசலான காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் முதலில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஐஎஸ் பொறுப்பேற்பு
தொடர்ந்து இரவு நேரத்தில், விமான நிலையத்தின் அருகில் மேலும் இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆப்கன் மக்களுடன் சேர்த்து 13 அமெரிக்க வீரர்கள், இரண்டு அமெரிக்க அலுவலர்கள், ஒரு மருத்துவ அலுவலர் என மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்திய தற்கொலை படை பயங்கரவாதி காபூல் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின், ஆப்கானிஸ்தான் இணை அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கோரஷான் பொறுப்பேற்றுள்ளது. காபூல் விமான நிலையத்தின் நெரிசலான வாயில்களில் அருகே நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்திய தற்கொலை படை பயங்கரவாதியின் புகைப்படத்தையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஆலோசனை
இந்த தாக்குதலை முதலில் பென்டகன் அமைப்புதான் உறுதி செய்தது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததும் உடனடியாக அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் இருக்கும் அவசர அறைக்கு சென்று கூட்டத்தை நடத்தினார்.
இந்த அறையில் காபூலில் நடக்கும் விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் லைவ் சாட்டிலைட் வீடியோ, டிரோன் வீடியோ மூலம் நிலைமையை கண்காணித்தார். அமெரிக்க வீரர்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார்.
தாலிபான் கண்டனம்
காபூல் தாக்குதலுக்கு தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பிற்கும் தாலிபான்களுக்கும் மோதல் நிலவி வருகிறது.
- கிராஃபிக் வீடியோ எச்சரிக்கை
இதன் காரணமாக, இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்திருக்கும் தாலிபான், இது போன்ற நாசகார கும்பல்கள் உடனே ஒடுக்கப்படுவர் என்று இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுத்த நாடுகள்
முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளின் உளவுத்துறை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் யாரும் காபூல் விமான நிலையத்திலோ, அதன் அருகாமையிலோ இருக்கவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மெளனம் கலைத்த பைடன்
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும் சரி, அமெரிக்கா அவர்களை மன்னிக்காது. இதனை நாங்கள் மறக்கவும் மாட்டோம். இதற்காக பயங்கரவாதிகள் பதில்சொல்லியே தீர வேண்டும். பதிலடிக்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தாலிபான் ஆட்சி
2001ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபனை அதிகாரத்திலிருந்து நீக்கிய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, தாலிபான்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விலகுவதாக அறிவித்தன.
தேசத்தை கைப்பற்றிய பிறகு முக்கிய அறிவிப்பாக, மேற்கு நாடுகளை அச்சுறுத்தக்கூடிய பயங்கரவாதிகளின் தளமாக ஆப்கானிஸ்தான் மாற அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபான் உறுதியளித்திருந்தது.