ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபராக பொறுப்பேற்ற பின் ட்ரம்ப் தெரிவிருந்தார். இதைத் தொடர்ந்து அந்நாடு மீது பல்வேறு தடைகளையும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, பிற நாட்டு ஆதரவுடன் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் நீடித்துவருகிறது. எனினும், விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இருந்துவருகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையே வார்த்தைப்போர் மூண்டது. இது தொடர்ந்து நடைபெற்றுவருவதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. மேலும், வளைகுடா பகுதிகளுக்கு 1,500 படைகளை அனுப்புவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதிபர் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டான், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்திறங்கினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அமீரகத்தின் அலுவலர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்" என்று பதிவிட்டார்.
இந்நிலையில், கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் தாணியை, ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அப்பாஸ் அராகுஷி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது, அமெரிக்காவின் அதிரடியான நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் இத்தகைய சூழலில், வளைகுடா நாடுகளுடன் ஈரான் ஆலோசனை நடத்த ஆயத்தமாகி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.