காலையில் எழுந்ததும் பலருக்கு காபியில் முழித்தால்தான் அன்றைய பொழுதே நன்றாக அமையும். பெரும்பாலான மக்களுக்கு காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்ததும் ஒன்று, சாப்பிட்டு முடித்த பிறகு, மதிய உணவுக்கு இடையில், மாலை நேரம், இரவு என்று ஒரு நாளில் மட்டும் 6 அல்லது 7 காபிகள் குடிப்பவர்கள் உண்டு. காபி குடிப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது, உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது என்று பலரும் கூறுவர்.
காபியினால் பல நன்மைகளும் உண்டு, அதே சமயத்தில் அதன் மூலம் தீங்கும் விளையும் என்ற வாதத்தை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். எவ்வளவு வாதங்கள் தொடர்ந்து வந்தாலும் காபி குடிப்பவர்கள் மட்டும் அதனை கண்டு கொள்வதில்லை. காரணம் காபி மீதுள்ள தீரா காதல், அவர்களுக்காகவே கொண்டாடப்படும் நாள் தான் சர்வதேச காபி தினம்.
காபியின் பூர்வீகம் எத்தியோப்பியா, அங்குதான் முதன் முதலில் காபி செடி உருவானது. ஆடு மேய்ப்பவர்களால் அறியப்பட்ட காபி செடி பின்னாளில் அனைவரும் அறியும் ஒரு பானமாக உருவெடுத்துள்ளது. காபி செடியில் கிடைக்கும் பழத்தில் இருந்து தான் காபி பொடி தயாரிக்கப்படுகிறது. காபி செர்ரி என்ற பழத்தில் இருந்துதான் இது கிடைக்கப்பெறுகிறது. அந்த பழத்தை உடைத்தால் இரண்டு விதை இருக்கும் அதில் ஒன்று வளராமல் இருந்தாலும், அந்த விதை கசப்பாக இருக்கும். இரண்டு விதையும் வளர்ந்தால் மட்டுமே காபி கிடைக்கும்.
காபியை ரோட்டுக் கடைகளில் கிடைக்க ஆரம்பமான பிறகு பலருக்கும் அதுதான் மீட்டிங் ஸ்பார்ட். முக்கியமான முடிவுகள், ஆபிஸ் டிஸ்கஷன், கல்லூரி மாணவர்களின் அரட்டை உள்ளிட்டவைகளுக்கு காபி ஷாப்களே பேஃவரைட் இடம். வீட்டில் மகன் இல்லை என்றாலே பெரும்பாலான அப்பாக்கள் சந்தேகமில்லாமல் உடனே கூறுவர் 'அவன் அந்த ரோட்டோரக் காபி கடையில அரட்டை அடிச்சுட்டு இருப்பான்' என்று.