சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாக விளங்கும் ஹாங்காங்கில் ஜனநாயக உரிமை கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஐந்து மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் அரசின் தடையையும் மீறி வார இறுதி நாட்களில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஏராளமானோர் காயமடைவதுண்டு. இந்த போராட்டங்கள் சில சமயம் வாரநாட்களிலும் தொடர்கின்றன.
இந்நிலையில், போக்குவரத்து சேவைகளை மறித்து ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, நபர் ஒருவர் எரிக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த வீடியோவில், பச்சை நிற ஆடை அணிந்துள்ள அந்த நபர் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றும், கண்ணிமைக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் மீது பெட்ரோல் போன்ற எரிபொருளை ஊற்றி அவரை எரிப்பது போன்றும் காணப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹாங்காங் காவல் துறையினர், 'வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் போராட்டக்காரர்கள் சிலர் தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றனர். பாதிக்கப்பட்ட அந்த நபர் பயங்கர தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்' என்று கூறியுள்ளனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஹாங்காங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிங்க: பொலிவியாவின் அமைதியற்ற சூழல் குறித்து ஐநா கவலை!