ஜப்பானின் எம்.வி. வாகாஷியோ என்னும் சரக்கு கப்பல் நான்காயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சீனாவிலிருந்து பிரேசில் சென்றது. அப்போது இந்தியப் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மொரீஷியஸ் அருகே உள்ள பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் கப்பலில் இருந்த ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புளூ பே ஆஃப் மெரைன் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்தை மொரீஷியஸ் அரசு சார்பாக சுற்றுச்சூழல் அவசர கால நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு அந்நாட்டின் பல சுற்றுலா கடற்கரைகள், சதுப்பு நிலத் தோட்டங்கள் எனச் சுற்றுச்சூழல் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்கு உதவும் விதமாக பெங்களூருவைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட உயர் ரக ஹெலிகாப்டர்களான 'துருவ்', 'சேதக்' ஆகியவை அனுப்பப்பட்டன.