சீனாவின் வூஹானில் நகரில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோய் காரணமாக இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை இயல்புக்குக் கொண்டுவரும் முயற்சியில் அந்நாடுகள் இறங்கியுள்ளன.
இதனிடையே, ரஷ்யா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தொற்றுப் பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது ஆயிரத்து 300 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், அந்நாட்டின் தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை அடைந்துள்ளது. கோவிட்-19ஆல் இதுவரை அங்கு இரண்டு ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு இரண்டாவது இடம்.