தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பளிக்க வேண்டும் - பாகிஸ்தான் நீதிமன்றம் - ஜாதவ் வழக்கு

குல்பூஷன் ஜாதவ் சார்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜாதவ்
ஜாதவ்

By

Published : Sep 3, 2020, 6:29 PM IST

இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, அவர் சார்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வாதாட இந்திய வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், ஜாதவ் சார்பாக வாதாட வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கும்படி இஸ்லாமாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு குறித்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் தலைமை வழக்கறிஞர் காலித் ஜாவேத் கான், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப ஜாதவுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (வயது 49), கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாகிஸ்தானை உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால் அதனை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்தியத் தூதரகம் அணுக பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு பெறப்பட்டது. குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவரை பத்திரமாக மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், ஜாதவுக்காக வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்கக் கோரியும் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவும் ஆலோசகர்களாக மூன்று மூத்த வழக்கறிஞர்களை நியமித்தும், இந்திய அரசு சார்பில் வழக்காட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறும் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில், தலைமை நீதிபதி அதார் மினல்லா, நீதிபதிகள் அமீர் ஃபருக், மியான் குல் அவுரங்கசீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details