ஆப்கானிஸ்தான் பல்வேறு பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கியபோது அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்தனர். இச்சூழலில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அவர், "தாலிபான்கள் என்னை விலகச்செய்துவிட்டனர். அவர்கள் காபூலையும், காபூல் மக்களையும் தாக்கவே வந்திருக்கிறார்கள். ரத்த களறி ஏற்படுவதை தவிர்க்க நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது எனக் கருதினேன்
எண்ணற்ற மக்கள் காபூலின் அழிவை பார்த்திருப்பார்கள். அறுபது லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் இது மனிதப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இது ஒரு வரலாற்றுச் சோதனை.
துப்பாக்கிகள், வாள்களின் தீர்ப்பில் அவர்கள் வென்றுவிட்டார்கள். தற்போது ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. மக்களின் இதயங்களையும், சட்டத்தையும் வெல்ல அனைத்து மக்கள், தேசங்கள், பல்வேறு துறைகள், சகோதரிகள், பெண்களின் பாதுகாப்பை தாலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அறிவுடன் செயல்பட்டு தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்வேன்" எனக் குறிப்பிட்டார். இருப்பினும் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்தத் தகவலையும் பகிரவில்லை. மேலும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆப்கானிஸ்கான் இஸ்லாமிய அமீரகம் ( Islamic Emirate of Afghanistan) என பிரகடனப்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி!