கரோனா பரவலுக்குப் பிறகு அதன் சமூக-பொருளாதார தாக்கம் குறித்து 136 நாடுகளிடம் யுனிசெஃப் நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக 104 நாடுகள் பதிலளித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, மலேசியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இச்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதே போல், தெற்காசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா நாடுகளில் சேவைகள் கிடைப்பதிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
'கரோனாவால் அதிகரித்த குழந்தைகள் மீதான வன்முறை’ - கவலை தெரிவிக்கும் யுனிசெஃப் - கொரோனா பாதிப்பு
கரோனா பரவலின் தாக்கம் காரணமாக வன்முறை தடுப்பு, வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சேவைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மீதான அத்துமீறல்களும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளதாக யுனிசெஃப்பின் உலகளாவிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் கூறுகையில், "இந்தத் தொற்றுநோய் காலக்கட்டத்தில் குழந்தைகளின்மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவது அதிகமாகியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள குழந்தைகளில் சிலர், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமையில் உள்ள பாதுகாப்பு சேவைகள், சமூக சேவகர்களால் சரியான நேரத்தில் உதவி செய்ய இயலவில்லை. முந்தைய தொற்றுநோய் காலத்திலும் இத்தகைய பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. எடுத்துக்காட்டாக, மேற்கு ஆப்பிரிக்காவில் ’எபோலா’ வைரஸ் பரவத் தொடங்கிய சமயத்தில், குழந்தைகள் நல கட்டமைப்புகளும் சமூக வழிமுறைகளும் பலவீனமடைந்து குழந்தைகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "குழந்தைகள் நலனைப் பாதுகாக்க யுனிசெஃப், அரசாங்கங்களுடனும் சில அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றவுள்ளது. எடுத்துக்காட்டாக, பங்களாதேஷில் யுனிசெஃப், சமூக சேவகர்களிடம் முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களை வழங்கி அவற்றை சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கும், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் வழங்கியது. மேலும், தேசிய குழந்தை ஹெல்ப்லைன் 1098க்கு கூடுதல் சமூக சேவகர்கள் ஆட்சேர்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.