சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. உலகளவில் இந்த வைரஸால் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் 17ஆம் தேதியிலிருந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தது. குறிப்பாக, மார்ச் 28ஆம் தேதி அன்று அந்நாட்டில் அதிகபட்சமாக 457 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு நேற்றுதான் 100க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதுவரை அந்நாட்டில் கரோனா வைரஸால் 6,104 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வைரஸால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு 130 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிதி ஒதிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சீன நாட்டின் வூஹானில் ஊரடங்கு தளர்வு