உலகையே ஆட்டிப்படைத்துவரும் கோவிட்-19 வைரஸ் தொற்று முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் என்ற நகரில் கண்டறியப்பட்டது. இங்குள்ள காட்டு விலங்குகளை விற்கும் சந்தையிலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வூஹான் நகரில் வைரஸ் தொற்று வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு மோசமாக அதிகரித்தது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், அந்நகரை அதிக ஆபத்துடைய மண்டலமாகவும் சீனா அறிவித்தது.
சீனாவின் மாநில கவுன்சில் வழிமுறைகளின்படி, எந்தவொரு மாகாணத்திலும் நகரிலும் குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு யாரும் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் அது குறைந்த ஆபத்துடைய மண்டலமாக அறிவிக்கப்படும்.
அதேபோல 14 நாள்களில் 50-க்கும் குறைவான பாதிப்புகள் கண்டறியப்படும் இடங்கள் நடுத்தர ஆபத்துடைய மண்டலங்களாகவும் 50-க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதிசெய்யப்படும் இடங்கள் அதிக ஆபத்துடைய மண்டலங்களாகவும் அறிவிக்கப்படும்.
அதன்படி வூஹான் நகரில் கடந்த 14 நாள்களாக வைரஸ் பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளதால் அந்நகரை குறைந்த பாதிப்புடைய மண்டலமாக ஹூபே மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் 12 நாள்களுக்கு முன்தான் ஊரடங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.