நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் மார்ச்15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து, நியூசிலாந்தின் துப்பாக்கிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.
அதன்படி, தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிக்கு ஜெசிந்தா தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற அல்நூர் மசூதியில்சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் இன்று தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.