சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று முதலில் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இந்த வைரஸ் தொற்றை கையாள்வதில் சீனா மோசமாகச் செயல்பட்டதாக பலரும் விமர்சித்தனர். அதன்பின் எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று தற்போது அங்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் சனிக்கிழமை மட்டும் ஐந்து பேருக்கு புதிதாக கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள், மூன்று பேர் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஜிலின் நகரில் மீண்டும் கோவிட்-19 பரவுவதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் (asymptomatic case) 12 பேருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கோவிட்-19 தொற்று யாருக்கும் கண்டறியப்படாமல் இருந்த வூஹான் நகரிலும் கடந்த சில நாள்களாக சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.