தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2020, 5:07 PM IST

ETV Bharat / international

அழுத்தம் தரும் சீன அரசு: பல ஆயிரம் செயலிகளை நீக்கிய ஆப்பிள்!

பெய்ஜிங்: சீன அரசின் புதிய இணையக் கொள்கை காரணமாக பல ஆயிரம் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

Apple to remove games
Apple to remove games

சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையைத் தாண்டி, ஆப் ஸ்டோர் மூலமும் அதிக வருவாயை ஆப்பிள் ஈட்டிவருகிறது.

இந்நிலையில், சீன அரசு புதிய இணையக் கொள்கைகளைச் சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி, கேம் டெவலப்பர்கள் ஆப் ஸ்டோர்களில் ஒரு வீடியோ கேமை பதிவேற்றம் செய்வதற்கு முன், சீன அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும்.

இந்தப் புதிய கொள்கை காரணமாக ஆப்பிள் நிறுவனம், தனது ஆப் ஸ்டோரிலிருந்து பல ஆயிரம் வீடியோ கேம் செயலிகளை நீக்கியுள்ளது. குறிப்பாக, ஜூலை 1ஆம் தேதி 1,571 கேம்களையும், ஜூலை 2ஆம் தேதி 1,805 கேம்களையும், ஜூலை 3ஆம் தேதி 1,276 கேம்களையும் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக TechNode நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இப்புதிய உத்தரவு காரணமாக சுமார் 20 ஆயிரம் செயலிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து AppInChina நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் டோட் குன்ஸ் கூறுகையில், "துரதிருஷ்டவசமாக, சீனா ஒரு ஆண்டுக்கு சுமார் 1,500 வீடியோ கேம்களுக்கு மட்டுமே உரிமங்களை வழங்குகிறது.

அனுமதி பெறும் செயல்முறைக்கு மட்டும் ஆறு முதல் 12 மாதங்கள் வரை ஆகும். எனவே, நீக்கப்பட்ட இந்தச் செயலிகள் மீண்டும் ஆப் ஸ்டோரில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பணம் செலுத்தக்கூடிய சுமார் 60 ஆயிரம் வீடியோ கேம்களை சீனாவின் ஆப் ஸ்டோர் கொண்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 16.4 மில்லியன் டாலர்கள் வருவாயாகக் கிடைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த நாடான அமெரிக்காவில் ஆப் ஸ்டோர் மூலம் ஆண்டுக்கு சுமார் 15.4 மில்லியன் டாலர்கள் மட்டுமே வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் இருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு மொபைல் வீடியோ கேம் மூலம் கிடைக்கும் வருவாயில் சுமார் 53 விழுக்காடு சீனாவிலிருந்து மட்டும் கிடைக்கிறது.

இதையும் படிங்க: இறுகும் சீனாவின் பிடி - ஹாங்காங்கிலிருந்து வெளியேறும் டிக்டாக்!

ABOUT THE AUTHOR

...view details