கடந்த மே 5ஆம் தேதி இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியதை அடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன ராணுவம் தனது படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது.
ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதிக் கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீனத் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது.