காந்த சக்தியின் உதவியோடு அந்தரத்தில் பறக்கும் அதிவிரைவு ரயில்களை தயாரிப்பதில், தொழில்நுட்பதுறையில் அதிக அளவிலான ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே போட்டி நிலவிவருகிறது.
சக்திவாய்ந்த காந்தங்களை பயன்படுத்தி ரயில்வே தடங்களில் வெளிப்படும் உராய்வின் மூலம் இந்த ரயில்கள் மிகவேகமாக செல்கிறது. குறுகிய தூரத்திற்கு செல்லும் இம்மாதிரியான Maglev ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுவருகிறது. ஆனால், உலகிலேயே முதல்முறையாக நீண்ட தூரத்திற்கு செல்லும் Maglev ரயில்களை மேம்படுத்த ஆசியா கண்டத்தில் மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.
அவர்கள் திட்டமிட்டப்படி, நீண்ட தூரம் செல்லும் Maglev ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அந்த தொழில்நுட்பத்தை ஏற்றமதி செய்யும்போது சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெரும் பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலக சந்தையில், ரயில் உள்கட்டமைப்புக்கு என உலக நாடுகள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்க தயாராக உள்ளன.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிறிஸ்டோபர் ஹூட் இதுகுறித்து கூறுகையில், "Maglev தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு என பெரிய சந்தை காத்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் சிறப்பாக அமல்படுத்தியுள்ளன. வெளிநாடுகளில் எப்படி அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்கு அவை முன்னுதாரணமாக திகழ்கின்றன" என்றார்.
ஜப்பான்தான் உலகிலேயே முதல்முறையாக புல்லட் ரயில்களை இயக்கியது. மற்ற நாடுகளில் அதிவிரைவு ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை ஜப்பானே வழங்கிவருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த அதிவிரைவு ரயில்வே திட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அதிக முக்கியத்துவம் அளித்தார்.
கடந்த பத்தாண்டுகளில், Maglev ரயில் தொழில்நுட்ப உபகரணங்களை குறைந்த விலையில் ஏற்றமது செய்து ஜப்பானுக்கு சீனா கடும் போட்டி அளித்துவருகிறது. இந்தோனேஷியாவின் முதல் அதிவிரைவு ரயில்வே திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஏலத்தில் சீனா நாட்டு நிறுவனத்திடம் ஜப்பான் நிறுவனம் தோல்வி அடைந்தது. இருப்பினும், திட்டம் அமல்படுத்துவதில் காலதாமதமானதால் அத்திட்டத்தில் ஜப்பான் பின்னர் இணைந்தது.
புல்லட் மற்றும் அதிவிரைவு Maglev ரயில் திட்டங்களை மேம்படுத்துவதில் சீனாவிற்கு ஜப்பான் கடும் போட்டி அளிக்கிறது என சீன செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. Maglev ரயில் திட்டத்திற்கான தற்போதைய மற்றும் எதிர்கால சந்தையில் தனக்கான இடத்தை பிடிக்க சீனா கடும் முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.