கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஐந்தாம் கட்ட ஈழ போரில் இலங்கை ராணுவத்தினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நினைவாக புகழ்பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்று கட்டி எழுப்பப்பட்டிருந்தது.
தமிழ் இனப்படுகொலை நாள் என உலகத்தமிழரால் அனுசரிக்கப்படும், மே 16ஆம் தேதியன்று ஆண்டுதோறும் அந்த நினைவுத் தூபிக்கு மாணவர்கள் சார்பில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டுவருகிறது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அந்த நினைவுத் தூபியை கடந்த 8ஆம் தேதியன்று இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இரவோடு இரவாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பல்கலைக்கழகத்தின் முன் திரண்டனர். அவர்களை ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகள் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அரசின் இந்த செயல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு, கிழக்கில் கொந்தளிப்பான சூழல் உருவானது.
இதனையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் கட்டக் கோரிக்கை விடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர். மாணவர்களின் போராட்டம் காட்டுத் தீயாய் உலகத் தமிழர்களிடையே பரவியது.
தமிழ்நாடு, கனடா, மலேசியா, லண்டன், பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்களின் வீரியத்தை உணர்ந்த அரசு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ். சிறிசற்குணராஜாவை முன்னிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அதனைத் தொடர்ந்து, இடிக்கப்பட்ட இடத்திலேயே தூபிக்கான அடிக்கல் மீண்டும் நாட்டப்பட்டதை அடுத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி : இடிப்பதற்கு முன்பும், பின்பும் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (ஜன.11) வடக்கு, கிழக்கு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து மாவட்டங்களும் முடங்கின. சந்தைகள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் மட்டுமே இயங்கின. பள்ளிக்கூடங்களின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவத் தலைவர் இ. அனுசன் கூறுகையில், “தமிழ் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்றும் நிலையாக உள்ளன. அந்த நினைவுகளை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாக இளந்தலைமுறைக்கு காண்பிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அடையாளங்களை அழிப்பதன் மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவுகளை மறைத்து வரலாற்றினை மாற்ற துணை போகும் எத்தர்களின் செயல்களை நாம் துணிவோடு எதிர்ப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க :வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து நால்வர் உயிரிழப்பு!