உலகெங்கும் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகள் கோவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றை பல நாடுகள் மோசமாகக் கையாண்டுவருவதாகப் உலகத் தலைவர்களும் விமர்சித்துள்ளனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு அருகேவுள்ள குட்டித்தீவு நாடான நியூசிலாந்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மிகச் சிறப்பாக மேற்கொண்டுவருவதாகப் பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் சிகிச்சைப் பெற்றுவந்த கடைசி கரோனா நோயாளியும் தற்போது குணமாகியுள்ளதால், கரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "நியூசிலாந்தில் வைரஸ் (தீநுண்மி) பரவலை இப்போது தடுத்துவிட்டோம் என்றே நாங்கள் நம்புகிறோம். ஒரு தொடர்ச்சியான முயற்சியாலேயே இது சாத்தியமாகியுள்ளது.
நிச்சயமாக நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கு நாம் தோற்றுவிட்டதாகப் பொருளாகாது. அதுதான் இந்தத் தீநுண்மியின் இயல்பு. ஆனால் அப்படி நிகழும்பட்சத்தில், நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதால், நாட்டில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன.