தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

’மாற்றுத் துணி, காலணிகளுடன் தான் சென்றேன்’ - ஆப்கனை விட்டு வெளியேறிய அதிபரின் முதல் பதிவு! - அடுத்த ஆப்கன் அதிபர்

அஷ்ரப் கானி நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே தான் நாட்டைவிட்டு வெளியேறியதாகப் பதிவிட்டுள்ளார்.

Ashraf Ghani
Ashraf Ghani

By

Published : Aug 19, 2021, 8:23 AM IST

Updated : Aug 19, 2021, 9:07 AM IST

துபாய்:ஆப்கன் நாட்டில் தாலிபன்கள் படிப்படியாக தாக்குதல் நடத்தி, தற்போது ஆட்சியைப் பிடித்துவிட்டனர்.

அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. முன்னதாக ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனிடையே, அஷ்ரப் கானி ஆப்கனை விட்டு வெளியேறியபோது, கார்கள், பண மூட்டைகளுடன் தஜிகிஸ்தான் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அஷ்ரப் கானி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முன்னாள் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியையும், அவரது குடும்பத்தினரையும் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்று அடைக்கலம் அளித்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியது குறித்து பலதரப்பட்ட செய்திகளும் வெளிவந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொலியில் தற்போது அபுதாபியில் உள்ள அஷ்ரப் கானி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை அவமதிக்க நினைக்கவில்லை

அந்தக் காணொலிப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். ஒருவேளை நான் ஆப்கானிஸ்தானிலேயே அதிபராக இருந்திருந்தால், நாட்டு மக்கள் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். உலக வரலாற்றில் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.

கௌரவமான மரணத்திற்கு நான் பயப்படவில்லை. ஒருபோதும் ஆப்கானிஸ்தானை அவமதிக்க நினைக்கவில்லை. ஆனால், நான் வெளியேற வேண்டியிருந்தது. அப்படி நான் செல்லும்போது நான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே வெளியேறினேன். அந்த நேரத்தில் காலணி அணிய கூட நேரம் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால், நான் கார்கள், பண மூட்டைகளுடன் சென்றதாக பழி சுமத்தப்பட்டுள்ளேன். இச்செய்தி முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. ஆப்கன் பாதுகாப்பு படையினரின் தயக்கம், தாலிபன்கள் அதிகாரத்தை பறிக்க வழிவகுத்தது. இருப்பினும், பாதுகாப்பு படையினருக்கு நன்றி" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிலிருந்து வெளியேறிய போது அதிபர் அஷ்ரப் கானி, நான்கு கார்கள் முழுக்க பணத்தை நிரப்பிக்கொண்டு அதை அவர், சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டு சென்றதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் நிகிதா இஷென்கோ முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆப்கன் அதிபர் யார்?

தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த ஆப்கன் அதிபர் யார் எனும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, அடுத்த அதிபராக முல்லா அப்துல் கானி பரதார் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லா அப்துல் கானி, தலிபான் நிறுவனர்களில் ஒருவர். தாலிபன் தலைமயகப் பொறுப்பில் உள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன், தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாக அவர் கலந்து கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான், கராச்சி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முல்லா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரின் பரிந்துரையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்கான் பெண்கள், சிறுமிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

Last Updated : Aug 19, 2021, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details