ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, முழு ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் கைப்பற்றினர்.
33 மாகாணங்கள் அடிபணிந்துள்ள நிலையில், தாலிபான்களையே மிரளவைக்கிறது பெர்சிய மொழியில் ஐந்து சிங்கங்கள் நிலம் என அர்த்தம் கொண்ட 'பஞ்ச்ஷீர்' (Panjshir) மாகாணம்.
இந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் உள்ள இந்த மாகாணத்தை, அகமது மசூது தலைமையிலான பஞ்ச்ஷீர் போராளிகள் அரணாக இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாகவே, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்ற தாலிபான்கள் முயல்கின்றனர். இருப்பினும், அவர்களால் பஞ்ச்ஷீரின் அரணை தகர்க்க முடியவில்லை.
இந்நிலையில், பஞ்ச்ஷீர் போராட்டக்குழு கூறுகையில், "மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலைவரை நடைபெற்றுவரும் சண்டையில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட தாலிபான்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் அல்லது சரணடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளனர்.
மேலும், தாலிபான் வட்டாரங்கள் கூறுகையில், " பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கண்ணிவெடி வைத்திருப்பதால் போராளிக் குழுக்களை எதிர்த்துப் போராடுவது தாலிபான்களுக்கு சிரமமாக உள்ளது.
குறிப்பாகத் தலைநகர் பஜராக், ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலைகளில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருப்பதால் முன்னேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் அரசு ஊழியர்களைக் குறிவைக்கும் தாலிபான்கள்... மின்னஞ்சல் கணக்குகள் முடக்கிய கூகுள்!