சீனாவையும், பாகிஸ்தானையும் சாலை, ரயில் பாதை மற்றும் எண்ணெய், எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்கள் மூலம் இணைக்கும் சீனா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடம் 7000 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
சீனாவின் இந்தத் திட்டம், மேற்கு சீனாவின் காஷ்கரை அரேபிய கடல் கடற்கரையில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும். சீனா இந்தியப் பெருங்கடலை எளிதில் அணுக இந்தத் திட்டம் வழிவகுக்கும். அதே வேளையில், பாகிஸ்தான் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த இந்தப் பொருளாதார வழித்தடம் உறுதியளிக்கிறது.
இந்நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (சிபிஇசி) பாதுகாக்க சுமார் 25 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப சீனாவும் பாகிஸ்தானும் முடிவுசெய்துள்ளன.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பல இந்திய ராணுவ அலுவலர் வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, "சிறப்புச் சேவைகள் பிரிவு வடக்கு (எஸ்.எஸ்.டி.என்.), சிறப்புச் சேவைகள் பிரிவு தெற்கு (எஸ்.எஸ்.டி.எஸ்.) என அழைக்கப்படும் 34, 44 லைட் காலாட்படை பிரிவுகள் இந்தப் பொருளாதார வழித்தடத்தில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளும் தலா மூன்று படைப்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதில், பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள், பஞ்சாப், சிந்து நாட்டைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் என மொத்தம் 25ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகத் தெரிகிறது.