கராச்சி: பாகிஸ்தானின் சிறுபான்மையினரான சியா ஹசரா சமுதாயத்தைச் சேர்ந்த 11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தானில் இருந்து இவர்களை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 4 பேர் படுகயாமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் சம்பங்கள் பாகிஸ்தானில் அதிரித்து வருகிறது.
இது குறித்து காவல்துறை தரப்பு, மச் நிலக்கரி சுரங்கத்துக்கு வரும் வழியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை அருகிலிருந்த மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்துள்ளனர். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான் கான், இது கோழைத்தனமான மனிதத்தன்மையற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.