அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பரப்புரை நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஜோ பிடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், ''இந்த ஆண்டின் எழுச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் இளம் தலைமுறையினர் மாற்றத்திற்கான ஒருங்கிணைப்பு, பேரணி, போராட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தான். இளம் தலைமுறையினர் தான் அமெரிக்காவில் ஒரு புதிய இயல்பை உருவாக்க முடியும். இந்த அமைப்பு நம் அனைவரையும் சமமாக நடத்துவதுடன், சமமான வாய்ப்பையும் வழங்குகிறது. அதனால் இம்முறை முன்பு இருந்ததைவிடவும் இன்னும் பலமாக நாம் வெளிவர வேண்டும்.
அதற்கு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதிபர் பதவிக்கு அனைவரை விடவும் அவர் சிறந்தவர். மிகச்சிறந்த அதிபராக வருவார் என்று எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் வித்தியாசமாகவும், சரியாகவும் பார்க்கக்கூடியவர். நிச்சயம் அனைத்து பிரச்னைகளயும் சரிசெய்வார். நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் தேர்தலில் அனைத்து இளைஞர்களும் வாக்களிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.