உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸால் அமெரிக்காவில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 76 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளைவிடவும் அமெரிக்காவில் அதிகப்படியாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பாதுகாப்பு அலுவலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா வைரஸ் தொற்றால் இருவரும் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.
இதையடுத்து டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' நான் அவருடன் குறைவான தொடர்பிலேயே இருந்தேன். மிகவும் நல்ல மனிதர். துணை அதிபரும் அவருடம் குறைந்த அளவிலான தொடர்பிலேயே இருந்தார். இருந்தும் எங்கள் இருவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கரோனா வைரஸ் இல்லை எனத் தெரிந்தது.
நேற்று நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இன்றும் செய்துகொண்டுள்ளேன். தினமும் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் தவறு இல்லை. ஒவ்வொரு நாளும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் '' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 2 கோடி பேர் வேலையிழப்பு!