உலக மக்கள் ஆவலோடு காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தேர்தலில் அமெரிக்க மக்கள் டிரம்புக்கோ, பிடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.
இதனை வாக்காளர்கள் குழு என்று அழைக்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது, தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டதுதான் "எலக்டோரல் காலேஜ்" எனப்படும் வாக்காளர் குழு அமைப்பு.
ஒவ்வொரு மாகாணத்திற்கும், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும்.
பெரும்பாலான மாகாணங்களில் எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். அந்த வகையில் தான், 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு கிட்டத்தட்ட 2.9 மில்லியன் மக்கள் வாக்களித்தும் தோல்வியடைந்தார்.
270 நம்பர்
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி, கூடுதலாக இரண்டு செனட்டர்கள் வாக்குகள் சேர்க்கப்படும். கணக்கிட்டதில், கலிஃபோர்னியாவில் தான் அதிக வாக்குகளாக 55 உள்ளன. டெக்சாஸில் 38 வாக்குகளும், நியூயார்க் மற்றும் புளோரிடாவில் வெற்றிபெறும் வேட்பாளர் 29 வாக்குகளும் பெற முடியும்.