அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள சிறிய மளிகைக்கடை ஒன்றில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் சில நாள்களுக்கு முன்பு பொருள்கள் வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பணம் கொடுத்துள்ளார். அதனைப் பார்த்து கள்ளநோட்டாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த கடைக்காரர், காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கடுமையான முறையில் ஜார்ஜ் ஃபிளாய்டிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், டெரீக் சவ்வின் என்ற காவலர் ஜார்க் ஃபிளாய்டை சாலையில் படுக்க வைத்து, அவரின் கழுத்தில் முட்டியைவைத்து வெகு நேரம் அழுத்தவே, மூச்சுவிட முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல தரப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. இனவாதத்துக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அமெரிக்கா தொடங்கி, உலகின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் தற்போது வெடித்துள்ளன.
இந்நிலையில், நேற்றைய தினம், கூகுள், யூ-ட்யூப் ஆகிய தளங்கள் தங்களது முகப்புப் பக்கங்களில் கறுப்பு ரிப்பன்களை இணைத்து ஜார்ஜ் ஃபிளாய்டின் இறப்புக்கு நீதிகோரி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவளித்தன.