கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொற்று குறைந்துவரும்போதும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் நோயின் தாக்கம் உயர்ந்துவருகிறது. இதுவரை 85,337க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவில் அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கரோனா வைரஸ் நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிர்க்ஸ் கூறுகையில், இதுவரை "3,70,000க்கும் மேற்பட்டோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தென் கொரியாவில் எட்டு வாரத்தில் 2,20,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் எட்டு நாள்களில் அதனை இங்கு செய்து முடித்துள்ளோம்" என்றார்.
கரோனாவின் அடுத்த தலைநகராக மாறும் அமெரிக்கா கரோனா வைரஸ் நோயால், சீனாவில் 81,782 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம், சீனாவைவிட அமெரிக்காவில் அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இருப்பினும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாக உள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 38,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரட்டன் பிரதமருக்கு கரோனா