கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, அமெரிக்காவின் சான்டிகோவில் செவிலியர் ஒருவருக்கு ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
W மாத்யூ என்ற 45 வயது செவிலியரான அவர் இதுகுறித்து கூறுகையில், "தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அதன் பின்விளைவாக கையில் வலியை உணர்ந்தேன். கரோனா பிரிவில் பணியாற்றி ஆறு நாள்களுக்கு பிறகு குளிர், எலும்பு வலி, சோர்வு ஆகியவற்றை உணர்ந்தேன். கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது" என்றார்.
சான்டிகோவில் குடும்ப சுகாதார மையத்தில் தொற்று நோய் நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவர் கிறிஸ்டியன் ராமேர்ஸ் இதுகுறித்து கூறுகையில், "இது ஒன்றும் எதிர்பாராதது அல்ல. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 10 நாள்களிலிருந்து 14 நாள்களுக்கு பிறகுதான் தொற்றுலிருந்து அது பாதுகாப்பு அளிக்கும் என்பதை ஆய்விலிருந்து தெரிந்துகொண்டோம்.
முதல் டோஸ் 50 விழுக்காடு பாதுகாப்புதான் அளிக்கும். இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டால்தான் 95 விழுக்காடு பாதுகாப்பு பெறமுடியும். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகவே செவிலியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார்.