புதிதாக ஆட்சிக்குவரும் ஒரு கட்சியும் அதன் தலைவரும் அதற்கு முந்தைய ஆட்சியாளர்களைக் குறைசொல்வது என்பது நம் நாட்டில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால், அமெரிக்காவில் இந்த ட்ரெண்டை தொடங்கிவைத்திருப்பவர் இந்நாள் அதிபர் ட்ரம்ப். இவர் நாட்டின் நிலைமைக்கு முன்னாள் அதிபர் ஒபாமாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர், தொடர்ந்து ஒபாமா என்ன தவறு செய்தார், அவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ட்ரம்ப், "அது நீண்ட காலமாக நடந்துவருகிறது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பிருந்தே அது நடந்துவருகிறது. அதுதான் ஒபாமாகேட்.
இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது நமக்கு அவமானம். இங்கு என்ன நடந்துள்ளது என்பதையும், இப்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அனைத்தையும் நான் பார்த்ததில் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது" என்றார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது அவர் 150 மில்லியன் டாலர்களை ஈரானுக்கு வழங்கியதாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டதாகவும் சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் 'ஒபாமாகேட்' என்ற அழைக்கப்படுகிறது.