அமெரிக்காவின் எரிபொருள் தேவையானது இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்துள்ளது. கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியதாலும் பொருளாதார நடவடிக்கைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்தத் திடீர் சரிவானது மின்சாரம், எண்ணெய்க்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் தேவை மிகவும் குறைந்ததால் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க எரிபொருள் நுகர்வு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் நுகர்வு 14 விழுக்காடு குறைந்துள்ளது. இது 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 2001ஆம் ஆண்டு ஏற்பட்ட வீழ்ச்சிதான் குறைந்த அளவு என்று கணக்கிட்டிருந்தனர். ஊரடங்கில் இயற்கை எரிவாயு பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல், ஏப்ரலில் பெட்ரோலிய நுகர்வு ஒரு நாளைக்கு 14.7 மில்லியன் டன்களாக வீழ்ச்சியடைந்தது. இது 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.