வாஷிங்டன்: பாகிஸ்தான் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக ’மலாலா யூசப்சையி உதவித்தொகை சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை ஐக்கிய அமெரிக்கப் பேரவை கொண்டு வந்துள்ளது.
2020 மார்ச் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் கொண்டுவரப்பட்ட மசோதா, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேலவையின் அங்கீகாரம் பெற்று அதிபர் ட்ரம்பிடம் சென்றுள்ளது. அவர் அனுமதித்ததும் இது சட்டமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மசோதாவின்படி 2020 - 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் சார்ந்த உயர் கல்வி பயிலும் பாகிஸ்தான் பெண்களுக்கு, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் 50 விழுக்காடு உதவித்தொகை வழங்க வேண்டும்.
பெண்கள் கல்வியின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் மலாலா பெயரையே இதற்கு வைத்துள்ளனர். 2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் உயர் கல்வி பெறும் 6,000 பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த மசோதா சட்டமானால், அதிக பேருக்கு உதவித்தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.