கோவிட்-19 தொற்று தற்போது உலகெங்கும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கரோனா பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு, அவசர கால திட்டம் எதையும் முன்னெடுக்கவில்லை என்று அமெரிக்க குற்றம் சாட்டியது.
மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் உலக நாடுகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு உருவாக்கும் கரோனா தடுப்பு மருந்து சோதனைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேற ட்ரம்ப் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. தேவையான முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.