இலங்கையில் கடந்த ஏப்.21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், நட்சத்திர விடுதி ஆகியவற்றில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, தொடர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சமீபத்தில் இரு மதத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு ராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரப்பன சநதித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.