இந்த மாதம் (ஜூன்) நடக்கவிருந்த ஜி7 உச்சி மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்தார். அது குறித்து அவர் பேசுகையில், ''ஜி7 மாநாட்டில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் உலக போக்கை பிரதிபலிக்கவில்லை. அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய நாடுகளையும் ஜி7 உச்சி மாநாட்டில் இணைக்க வேண்டும்'' என்றார்.
இது குறித்து ரஷ்யா தரப்பில் கூறுகையில், ''இது அதிகாரப்பூர்வ அழைப்பு தானா எனத் தெரியவில்லை. அதேபோல் ஜி7 உச்சி மாநாடு குறித்து முழுமையான விவரம் தெரிந்த பின்னரே கலந்துகொள்வது பற்றி முடிவு செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஜி7 உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா விலக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ரஷ்யாவை இணைக்க வேண்டும் என பேசியுள்ளார்.
இதற்கு கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் பேசுகையில், ''சர்வதேச விதிகளை மீறியதற்கும், அவமதிப்பதற்காகவும் தான் ரஷ்யாவை ஜி7 உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது. இதைத் தொடர வேண்டும்'' என்றார்.
இதனிடையே ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாட்டு தலைவர்கள் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.