கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் இதுவரை சுமார் 8 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 42 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த வைரஸ் தொற்றால் அனைத்து தொழில்துறையும் முற்றிலும் முடங்கியுள்ளதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கண்ணுக்குத் தெரியாத எதிரியின் இந்த தாக்குதலிலிருந்து அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். இதனால் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடவுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.