அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், உலகம் முழுவதுமே ட்ரம்ப் வெற்றிபெறுவது போலவும் இந்தியா, சீனாவில் மட்டும் பிடன் வெற்றிப்பெறுவது போன்ற உலக வரைபடத்தை ட்ரம்பின் மூத்த மகன் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்தியாவில் பிடன் வெற்றி - சர்ச்சை பதிவு வெளியிட்ட ட்ரம்ப்பின் மகன்!
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், உலக வரைபடத்தில் இந்தியாவில் பிடன் வெற்றிபெறுவது குறித்த ட்விட்டர் பதிவை ட்ரம்பின் மூத்த மகன் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இறுதியாக என்னுடைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகிறேன் என பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா, சீனா, மெக்சிகோ என சில பகுதிகளை தவிர்த்து உலகம் முழுவதுமே குடியரசு கட்சியின் சிவப்பு வண்ணத்தில் நிறைந்துள்ளது. இதன்மூலம், இந்தியா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகள் பிடனுக்கு ஆதரவாக உள்ளது என்பது போலவும் மற்ற நாடுகள் முழுவதையும் ட்ரம்ப் கைப்பற்றுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகள் இந்தியாவின் ஒரு அங்கமாக அந்த வரைபடத்தில் குறிப்பிடப்படவில்லை. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கரோனா விவகாரத்தில் சீனா குறித்து தொடர் விமர்சனங்களை ட்ரம்ப் வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.