2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை ( Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த வலியுறுத்தலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கிவரும் ராணுவ உதவிகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகாரானது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (நாடாளுமன்ற கீழ்) அவைத் தலைவர் நான்சி பெலோசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.