அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில் அதிபர் ட்ரம்ப், கரோனாவுக்கு பின் இயல்பு நிலை திரும்பும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முன்னதாகத் தெரிவித்தார். இதை உறுதி செய்யும் விதமாக ஹெ 1 பி, எல் 1 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்கள் வழங்க இந்த ஆண்டு இறுதிவரை தடை விதித்தார்.
இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், ஹெச்-1 பி விசாவுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுகளில் தற்போது சில முக்கியத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்பு ஒருவர் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அதே பொறுப்பில் சேர மீண்டும் அமெரிக்கா வந்தால், அவர்களுக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.