வெனிசூலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராக சில மாதங்களுக்குமுன் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். ஜூவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவுத் தெரிவித்திருந்தாலும், சீனா ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச சார்புடைய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து மடூரோ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. அதிபர் மடூரோவும் தான் பதவி விலகவோ, பொதுத்தேர்தலோ நடத்தவோ தயாராக இல்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், வெனிசூலாவிடம் கொள்கைச் சார்ந்து நீண்டகாலம் நட்பு பாராட்டிவரும் ரஷியா, சுமார் 100 வீரர்களுடன் தனது 2 ராணுவ விமானங்கள் வெனிசூலாவிற்கு அனுப்பிவைத்ததாகத் தகவல் வந்தது. அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள ரஷ்யா, தன்நாட்டு ராணுவத்தை வெனிசூலவிற்கு அனுப்பிய தகவலை அறிந்ததும் உடனடியாக அமெரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தேவையற்ற பதற்றத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக்கெல் பாம்பியோ எச்சரிக்கை வெளியிட்டார்.