பிரேசிலில் நாளை நடைபெறவுள்ள 11ஆவது பிரிக்ஸ் (BRICS - Brazil-Russia-India-China-South Africa) உச்சிமாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.
மாமல்லபுரம் சந்திப்பு, 'RCEP' (Regional Comprehensive Economic Partnership) என்ற மாபெரும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடந்த வாரம் இந்தியா மறுத்தது ஆகிய இரு நிகழ்வுகளின் பின்னணியில் இந்த சந்திப்பானது அமையவுள்ளது.
'RCEP' ஒப்பந்தத்தை இந்திய நிறுவனங்கள் அடியோடு வெறுக்கின்றனர். ஏனென்றால், அளவுக்கு அதிகமாக சீன பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாக இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யுமோ என அச்சம் இந்திய நிறுவனங்களிடத்தே உள்ளது.
சீனாவுடன் இந்தியா 50 பில்லியின் டாலர் ( 3.60 லட்சம் கோடி ரூபாய்) வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீட்டை முன்னெடுத்துச் செல்வது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான அமைச்சகக் குழு சீன துணைப் பிரதமர் ஹு சன்ஹுவா-வை ( Hu Chunhua) கூடிய விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ளவிருக்கும் மற்றொரு முக்கியப் பிரச்னை காஷ்மீர்.
பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுர சந்திப்பின் போது காஷ்மீர் குறித்து சீனா புகார் எழுப்பவில்லை என்றாலும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தான் அரசின் முயற்சிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா ஆதரவு கொடுத்தது இந்தியா-சீன நல்லுறவில் இன்னும் ஆராத வடுவாகவே உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதனிடையே, அரசியலைப்புச் சட்டம் 370 பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படத்தைத் தொடர்ந்து அங்குள்ள நிலவரம் குறித்து டாம் லண்டோஸ் மனித உரிமை ஆணையம் (Tom Lantos Human Rights Commisssion) தலைமையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக நாளை பிற்பகல் 2 மணிக்கு (உள்ளூர் நேரம்) விசாரணை நடக்க உள்ளது.
இதையும் வாசிங்க: BRICS SUMMIT 11 டிஜிட்டல் பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பை வலுப்படுத்த உதவும் - மோடி
இந்தியாவில் வாழும் சிறுபான்மை இன மக்களின் அவலநிலை குறித்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக இந்த ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சில சிறப்புத் தகுதிகளை அனுபவித்து வந்தது.
இந்த சிறப்புத் தகுதிகளை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கி, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டார்கள் என பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.