அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பின் பதவி காலம் இந்தாண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
கோவிட்-19 பரவல் காரணமாக இந்தத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜோ பிடன் இதுபற்றி எந்த கவலையுமின்றி காணொலி வாயிலாக பரப்புரை, நிதி திரட்டும் நிகழ்ச்சி என்று தொடர்ந்து பங்கேற்றுவருகிறார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கவுள்ளதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு முக்கிய செய்தி, அடுத்த வாரம் என்னுடைய நண்பரும் முன்னாள் அதிபருமான பராக் ஒபாமாவுடன் இணைந்து காணொலி காட்சி வழியே நடைபெறும் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளேன். அங்கு உங்களை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிலிருந்த பெர்னி சாண்டர்ஸ், எலிசபத் பிரவுன் ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.