கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் வெற்றியில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியாக ராபர்ட் முல்லர் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த இரண்டாண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விசாரணையின் முதல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “கூட்டு சதியும் இல்லை, நீதிக்கு எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முல்லரின் விசாரணையை அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வந்த டிரம்ப், “இதுபோன்ற விஷயங்களை நாடு கடந்து செல்ல வேண்டியது அவமானகரமான ஒன்று” என்றும் தெரிவித்துள்ளார்.2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை தேடி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்ட விசாரணை நடத்தி வந்தார் ராபர்ட் முல்லர். அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பல நெருங்கிய முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.