74ஆவது ஐநா சபை பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிபர் ட்ரம்ப், "மிக விரைவில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான தனது சந்திப்பின்போது பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்தோம். பயங்கரவாதம் குறித்து அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இம்ரான் கானும் சந்தித்துப் பேசினால் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஹவுடி மோடி: மாறி மாறி புகழ்ந்துகொண்ட மோடி, ட்ரம்ப்
மோடிதான் இந்தியாவின் தந்தை:
இந்திய-அமெரிக்க உறவில் 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "பிரதமர் மோடி மிகவும் சிறந்த தலைவர் ஆவார். அவரை நான் மதிக்கிறேன். எங்களுக்கு இடையேயான உறவு மென்மேலும் வலுவடைந்து கொண்டேசெல்கிறது.
உடைந்துகிடந்த இந்தியாவை ஒன்றுசேர்ந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு தந்தையைப் போன்று இதனை அவர் மேற்கொண்டுள்ளார். மோடிதான் இந்தியாவின் தந்தை" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி-ட்ரம்ப் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர்
விஜய் கோகலே, "சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வர்த்தகம், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் சுமார் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ப்பிடம் எடுத்துக் கூறினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சர்வதேச ஆதரவின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமெனில் பாகிஸ்தான் சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளார்" என்றார்.
குடும்பத்துடன் இந்தியா வாங்க: ட்ரம்ப்புக்கு மோடி அழைப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என இந்தச் சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியிலும் தன்னுடன் கலந்துகொண்ட ட்ரம்பை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க :'ஹவுடி மோடி!' ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த பிரதமர் நரேந்திர மோடி! - அதிர்ந்த அரங்கம்