அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவலர் ஒருவர் சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் choke hold எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பலமுறை கதறியும், காவலர் தனது பிடியை தளர்த்தாததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்றுவருகின்றன. இந்நிலையில், மினியாபோலிஸ் காவல் துறை முற்றிலும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மினியாபோலிஸ் நகர சபை தலைவர் லிசா பெண்டர் கூறுகையில், "மினியாபோலிஸ் காவல் துறையை முற்றிலும் கலைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். சமூகத்திற்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும் வகையில் இங்கு காவல் துறை மீண்டும் கட்டமைக்கப்படும்" என்று கூறினார்.