ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா-தலிபான்கள் இடையே பல கட்டங்களாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விளைவாகக் கடந்த திங்கள் கிழமை அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன்படி, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் ராணுவப் படையினரைத் திரும்பப்பெற அமெரிக்காவும், பயங்கரவாதத்தைக் கைவிட தலிபான்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இச்சூழலில், கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், தலிபான்களுடன் தான் மேற்கொள்ளவிருந்த ரகசிய சந்திப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக ரத்து செய்தார்.
இந்நிலையில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்புயோ கூறுகையில், "தற்போதுள்ள நிலமையில் தலிபான்களுடன் நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை". வருங்காலத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற நம்புகிறேன் என்றார்.
முதலில், நாங்கள் சொல்வதை கேட்க அவர்கள் (தலிபான்கள்) தயாராக இருப்பதை நிரூபிக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
2016 தேர்தல் பரப்புரையின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படையை வெளியேற்றுவேன் என்று வாக்களித்தார். இது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.