உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 47லட்சத்து 37 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 13 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பரவி தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென ஐ.நா மன்றம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய தலைவர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தலைமையில் 73ஆவது உலக சுகாதார ஒழுங்கு கூட்ட அமர்வு நேற்று (மே 16) மெய்நிகர் காணொலி சந்திப்பு நடைபெற்றது. இதில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளின் சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தென்கிழக்கு ஆசிய பிராந்திய தலைவர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “சீனாவிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் முதல் பாதிப்பு ஜனவரி 13ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டது. முன்னெப்போதும் கண்டிராத இந்த நோயை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தியது. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த அந்த அரசின் பணிகளை நாம் கவனிக்க வேண்டும்.
இப்போது, தெற்காசிய நாடுகளின் கோவிட்-19 வைரஸின் தாக்கம் குறித்த புரிதல், சிவப்பு குறியீட்டு பகுதிகள், தீவிர பாதிப்பிற்குள்ளான இடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகளவில் மாற்று சமூக, பொருளாதார வாழ்க்கை ஒரு ‘புதிய இயல்பு’க்கு மாறுவதற்கு அனைத்து நாடுகளும் இப்போது தயாராகி வருகிறது. முழு அரசாங்கமும், சமூகத்தின் முழு அணுகுமுறையும் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும்.
தெற்காசிய அளவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பாதிப்பு அதிகரித்து வருகின்ற பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பல்வேறு கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு அத்தியாவசியமான உதவிகளை தங்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.