கரோனா வைரஸ் பெருந்தொற்றால் மற்ற நாடுகளைவிட அமெரிக்காதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 1,283,929 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அலுவலர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பின் தனிப்பட்ட செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக அந்த செயலாளர் இவாங்கா ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் பணிபுரியாமல் தனது வீட்டில் பணிபுரிந்துவந்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவாங்கா ட்ரம்ப், அவரது கணவர் ஜாரேட் குஷ்னருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே, நேற்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தியாளர் கேட்டி மில்லருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.